Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நகரப் படலம் Kamba Ramayanam 34

மாளிகைகள்

26
நிலா வெளிச்சம் கருமைநிறம் என்று சொல்லும்படி அயோத்தியில் மாளிகைகள் வெள்ளை நிறத்தில் காணப்பட்டன.
27
இறைவானத்தில் புறாக்கள் குடியிருக்கும் மாளிகைகள் பொன்னால் வேயப்பட்டவை. அதனால் வெயில் பட்டதும் காலை இளவெயில் காய்வது போல எப்போதும் தோன்றும்.
28
வயிரத் தூணில் மரகத விட்டம் கிடத்தி, தேவர்களின் சித்திரங்கள் தீட்டப்பட்டு, கோடிக்கணக்கில் உயிர் உள்ளவை போலக் காணப்படும்.
29
நிலா வெளிச்சம் படும் முற்றங்கள், சந்தன மரத் தூண்கள், பவளம் பதித்த திண்ணை, மணி பதிக்கப்பட்ட விட்டம், இந்திர வில் நீலநிறச் சுவர் – இப்படி மாளிகைகள் இருக்கும்.
30
தாமரை போன்ற அடிப்பகுதி கொண்ட தூண்கள், செட்டான நிழல், சிவந்த வாயில், நடுவில் நாடகம் ஆடும் இடம், - இப்படி அமைக்கப்பட்டவை பல.


'திங்களும் கரிது' என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
வெங் கடுங் கால் பொர, மேக்கு நோக்கிய,
பொங்கு இரும் பாற்கடல்-தரங்கம் போலுமே.           26

புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை,
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன,
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி அம் கிரிமிசை விரிந்த போலுமே.    27

வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
உயிர் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே.             28

சந்திர காந்தத்தின் தலத்த, சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை,
செந் தனி மணித் துலாம் செறிந்த, திண் சுவர்
இந்திர நீலத்த, எண் இல் கோடியே.       29

பாடகக் கால் அடி பதுமத்து ஒப்பன,
சேடரைத் தழீஇயின, செய்ய வாயின,
நாடகத் தொழிலின, நடுவு துய்யன,
ஆடகத் தோற்றத்த, அளவு இலாதன.                30

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...