Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நகரப் படலம் Kamba Ramayanam 35

மாளிகையில் பறக்கும் கொடிகள்

31
மாளிகைக்குள் புகுந்தவர் தேவர் போலக் காணப்படுவர்.
32
உள்ளே நுழைந்த மகளிரும் மைந்தரும் அறநெறியில் வாழ்வர்.
33
அரசன் போலச் செல்வம் படைத்தவர் உயர்ந்த புகழுடன் வானளாவிய மாளிகைகளில் வாழ்வர்.
34
மாளிகைகளில் முத்துமாலைகள் அருவி போல் தொங்கும்.
35
மகளிர் கூந்தலைக் காயவைக்கையில் புகையும் புகை மாளிகைகளில் பறக்கும் கொடிகளில் மணக்கும். கொடிகள் சூலம் போன்ற கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும். அவை பகலில் தோன்றும் மின்னல் போல் காணப்படும்.

புக்கவர் கண் இமை பொருந்துறாது, ஒளி
தொக்குடன் தயங்கி, விண்ணவரின் தோன்றலால்,
திக்குற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன, உம்பர் நாட்டினும்.                31

அணி இழை மகளிரும், அலங்கல் வீரரும்,
தணிவன அறநெறி; தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில; பகலை வென்றன.   32

வானுற நிவந்தன; வரம்பு இல் செல்வத்த;
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய;
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன.                33

அருவியின் தாழ்ந்து, முத்து அலங்கு தாமத்த;
விரி முகிற்குலம் எனக் கொடி விராயின;
பரு மணிக் குவையன; பசும் பொன் கோடிய;
பொரு மயில் கணத்தன;-மலையும் போன்றன.       34

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின,
முகிலொடு வேற்றுமை தெரிகலா, முழுத்
துகிலொடு நெடுங் கொடிச் சூலம் மின்னுவ;-
பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே.   35

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...