Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 106

அரக்கர் படை

“தீத்தொழில் புரியும் அரக்கர் வருவது எப்போது” என்று ஆறு நாள் காவலுக்குப் பின்னர் முனிவரை இராமன் வினவினான். 31
விசுவாமித்திர முனிவர் எதுவும் கூறவில்லை. அப்போது வானில் இடி முழங்குவது போன்ற ஆரவாரம் கேட்டது. 32
அம்பு எய்தும், ஈட்டி எறிந்தும், மலைகளைப் பிடுங்கிப் போட்டும், வாயில் வந்தபடி வைதுகொண்டும் எண்ணிலா மாயங்களை அரக்கர்கள் செய்தனர். 33
வளைத்துக்கொண்டு வந்த படை வானத்தையே மறைத்தது. 34
வில் வாள் மழையாகப் பொழிந்தன. இசைக்கருவிகள் இடியாக முழங்கின. 35

காத்தனர் திரிகின்ற காளை வீரரில்
மூத்தவன், முழுது உணர் முனியை முன்னி, 'நீ,
தீத் தொழில் இயற்றுவர் என்ற தீயவர்,
ஏத்த அருங் குணத்தினாய்! வருவது என்று?' என்றான்.     31

வார்த்தை மாறு உரைத்திலன், முனிவன், மோனியாய்;
போர்த் தொழில் குமரனும், தொழுது போந்தபின்,
பார்த்தனன் விசும்பினை; -பருவ மேகம்போல்
ஆர்த்தனர், இடித்தனர், அசனி அஞ்சவே.        32

எய்தனர்; எறிந்தனர்; எரியும், நீருமாய்ப்
பெய்தனர்; பெரு வரை பிடுங்கி வீசினர்;
வைதனர்; தெழித்தனர்; மழுக் கொண்டு ஓச்சினர்;
செய்தனர், ஒன்று அல தீய மாயமே.   33

ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின,
கானகம் மறைத்தன, கால மாரி போல்;
மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்தென,
வானகம் மறைத்தன, வளைந்த சேனையே.               34

வில்லொடு மின்னு, வாள் மிடைந்து உலாவிட,
பல் இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை,
'ஒல்' என உரறிய ஊழிப் பேர்ச்சியுள்,
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே.           35

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...