Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 111

மிகைப் பாடல்கள் – பகுதி 2 – கவுசிகை ஆற்றுப் பாடல் ஒலி

வாயு சென்ற பின்னர் 100 மகளிரும் தவழ்ந்து சென்று தந்தையிடம் கூறினர். தந்தை மகளிரைத் தேற்றி, பிரமதத்தன் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்தான். 4-6
பிரமதத்தன் அவர்களை நீவியதும் அனைவரும் கூன் நிமிர்ந்தனர். இவன் குழந்தை இல்லாமையால் வேள்வி ஒன்று செய்தான். அதன் பயனாக் காதி என்பவன் மகனாகப் பிறந்தான். 4-7
இந்தக் காதிக்குப் பிரமதத்தன் ஆட்சியைக் கொடுத்தான். அந்தக் காதிக்கு நானும் (விசுவாமித்திரன்) கவுசிகை என்னும் பெண்ணும் பிறந்தோம். 4-8
பிருகு முனிவனின் மகன் இரிசிகன். இந்த இரிசிகனுக்கு என் தந்தை கவுசிகையை மணம் செய்து கொடுத்தார். 4-9
காதலன் இரிசிகன் நெடுந்தொலைவு சென்றுவிட்டான். அதனால் கவுசிகை ஆறாக மாறி ஓடிப் பாடலானாள். இதுதான் கவுசிகை ஆற்று ஓசை என்று விசுவாமித்திரன் இராமனுக்குக் கூறினான். 4-10

'சமிரணன் அகன்றதன் பின், தையலார், தவழ்ந்து சென்றே,
அமிர்து உகு குதலை மாழ்கி, அரசன் மாட்டு உரைப்ப, அன்னான்,
நிமிர் குழல் மடவார்த்தேற்றி, நிறை தவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன், திரு அனாரை.      4-6

'அவன் மலர்க் கைகள் நீவ, கூன் நிமிர்ந்து, அழகு வாய்த்தார்;
புவனம் முற்றுடைய கோவும், புதல்வர் இல்லாமை, வேள்வி
தவர்களின் புரிதலோடும், தகவு உற, தழலின் நாப்பண்,
கவனவேகத் துரங்கக் காதி வந்து உதயம்செய்தான்.           4-7

'அன்னவன் தனக்கு, வேந்தன், அரசொடு, முடியும் ஈந்து,
பொன்னகர் அடைந்த பின்னர், புகழ் மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு, யானும், கவுசிகை என்னும் மாதும்,
முன்னர் வந்து உதிப்ப, அந்த முடியுடை வேந்தர் வேந்தன்.          4-8

'பிருகுவின் மதலை ஆய, பெருந் தகைப் பிதாவும் ஒவ்வா,
இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான்;
அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி,
விரி மலர்த் தவிசோன் தன்பால் விழுத் தவம் புரிந்து மீண்டான்.            4-9

காதலன் சேணின் நீங்க, கவுசிகை தரிக்கலாற்றாள்,
மீது உறப் பாடலுற்றாள், விழு நதி வடிவம் ஆகி;
மா தவர்க்கு அரசு நோக்கி, "மா நிலத்து உறுகண் நீக்கப்
போதுக, நதியாய்" என்னா, பூமகன் உலகு புக்கான்.               4-10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...