Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நாட்டுப் படலம் Kamba Ramayanam 25

உழத்தியர்

41
மணம் ஊட்டும் அகில் புகை, சமைக்கும் புகை, கரும்புப்பால் ஆலையில்  காய்ச்சும் மணக்கும் புகை, நான்மறை ஓதும் அந்தணர் வேள்வி செய்யும் புகை, - அனைத்தும் சேர்ந்து மேகம் போலத் தோன்றின.
42
மகளிர் நடை போல் மயில்கள் நடந்தன. அவர்களின் மணி ஒளி போல வெயில் காணப்பட்டது. அவர்களின் கூந்தல் போல சோலையில் மேகங்கள் ஆடின. அவர்களின் விழிகள் போல மணக்கும் வயல்களில் கயல் மீன்கள் நகர்ந்தன.
43
இடை ஒடியும்படி உழத்தியர் நீராடினர். அவர்களின் வாய் இதழ்கள் போலக் குமுத மலர்கள் பூத்தன. அவர்களின் நடை போல அன்னங்கள் நடந்தன.  அவர்களின் முகம்போலத் தாமரைகள் பூத்தன.
44
விதியைப் பார்த்து உழத்தியர் விழிகள் சிரித்தன. கதியைப் பார்த்து அவர்களின் நடை சிரித்தது. தாமரை மொட்டைப் பார்ந்து அவர்களின் புலைகள் சிரித்தன. கலை நிறைந்த நிலாவைப் பார்த்து அவர்களின் முகம் சிரித்தது.
45
அவர்கள் அணிந்திருந்த மணிகள் பகலோடு போட்டி போட்டுக்கொண்டன.  அவர்களின் முலைகளோடு இளநீர் போட்டியிட்டது. நீரில் நின்ற வெள்ளை நுரை அவர்களின் ஆடையோடு போட்டியிட்டது. அவர்களின் மண முரசம் முழங்குவது போல இடி முழங்கியது.

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,
நகல் இன் ஆலை நறும் புகை, நான் மறை
புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்,
முகிலின் விம்மி, முயங்கின எங்கணும்.       41

இயல் புடைபெயர்வன, மயில்; மணி இழையின்
வெயில் புடைபெயர்வன; மிளிர் முலை; குழலின்
புயல் புடைபெயர்வன, பொழில்; அவர் விழியின்
கயல் புடைபெயர்வன, கடி கமழ் கழனி.           42

இடை இற, மகளிர்கள், எறி புனல் மறுகக்
குடைபவர், துவர் இதழ் மலர்வன, குமுதம்;
மடை பெயர் அனம் என மட நடை, அளகக்
கடைசியர் முகம் என மலர்வன, கமலம்.       43

விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.     44

பகலினொடு இகலுவ, படர் மணி; மடவார்
நகிலினொடு இகலுவ, நளி வளர் இளநீர்;
துகிலினொடு இகலுவ, சுதை புரை நுரை; கார்
முகிலினொடு இகலுவ, கடி மண முரசம்.      45

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -  2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...