Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நாட்டுப் படலம் Kamba Ramayanam 27



வண்மை, திண்மை, உண்மை, வெண்மை இல்லைஏன்?

51
மாலைகள் சொரிவது தேன். பாதை வழிகள் சொரிவது மணிக்கற்கள். ஊதைகள் (வாடைக் காற்று) சொரிவது உறையும் நீர்த்துளி. சொல்லும் காதைப் பாட்டு சொரிவது காதுக்கு உகந்த கனிகள். 
52
நடக்கும் சாயலைப் பார்த்தும், இளைஞர் எண்ணம் தள்ளாடிப் பாய்வது போலவும், குளம் நிறைந்த சோலையில் பூத்த மலர்களைச் சூடிக்கொண்டு முத்துவடம் அணிந்த முலையை ஆட்டிக்கொண்டு திரியும்  மடந்தைமாரோடு மயில்கள் தோகையை விரித்துக்கொண்டு செல்லும்.
53
கோசல நாட்டில் வள்ளண்மை இல்லை, காரணம் வறுமையுற்று வாங்குவோர் இல்லை. வலிமை இல்லை, காரணம் போரிடுவோர் இல்லை. உண்மை இல்லை, காரணம் பொய்யே இல்லை. அறியாமை என்னும் வெண்மை இல்லை. காரணம், பல நல்லனவற்றை மக்கள் சொல்வதால். 
54
எள், தினை, இறுங்கு, சாமை வாங்கிக்கொண்டு செல்லும் வண்டி, உப்பளத்திலிருந்து உப்புக் கொண்டுவரும் வண்டி, - இவை எதிர் எதிராகச் செல்லும். 
55
உயர்வும், சார்வும் இல்லாத உயிர்கள் தத்தம் செய்வினைக்கு ஏற்பப் பல பிறவிகள் எடுப்பது போல உண்ணும் தேனும், பாகும், ஆயர் ஊரின் தயிரும் வேரி என்னும் இனிப்புச் சாறும் இந்த நாட்டில் கலந்திருக்கும்.

கோதைகள் சொரிவன, குளிர் இள நறவம்;
பாதைகள் சொரிவன, பரு மணி கனகம்;
ஊதைகள் சொரிவன, உறை உறும் அமுதம்;
காதைகள் சொரிவன, செவி நுகர் கனிகள்;     51

இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே.   52

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.            53

எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,
தள்ளும் நீர்மையின், தலைமயங்குமே.          54

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
பெயரும் பல் கதிப் பிறக்குமாறுபோல்,
அயிரும், தேனும், இன் பாகும், ஆயர் ஊர்த்
தயிரும், வேரியும், தலைமயங்குமே.               55

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -  2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...