Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நாட்டுப் படலம் Kamba Ramayanam 28

உழவர் ஒலி

56
வாயில் வரும் பாட்டு, குழலில் வரும் பாட்டு - இவை வெவ்வேறு தெருக்களில் இசைக்கும். இவை ஆறும் ஆறும் எதிர்த்துக்கொண்டு ஒன்று கலப்பது போல ஊரில் திருவிழாவும், வேள்வியும் ஆங்காங்கே நிகழும்.
57
மூக்கில் வாய் வைத்து ஊதும் சங்கு, அடித்துத் தாக்கும் பறை, உரசித் தாக்கும் தண்ணுமை ஆகியவற்றின் ஒலிகள் உழவர் ஒலியில் அடங்கிப் போகும்.
58
மகளிர் மாலைகளில் தாய்ப்பால் ஒழுகும். அவர்கள் ஐம்படைத் தாலி அணிந்த தம் மக்களுக்குப் பால் ஊட்டுவர். நிலா வந்ததும் தாமரை கவிழ்ந்துகொள்வது போல குழந்தை முக நிலாவைப் பார்த்துத் தாய் முகத் தாமரை கவியும்.
59
பொன்னைப் போன்ற பண்பில் பொலிவு நிற்கும். பொய்மை இல்லாத நடத்தையில் நீதி நிற்கும். மகளிர் அன்பில் அறநெறி நிற்கும். மகளிர் கற்பில் பருவ மழை நிற்கும்.
60
சோலைகளை உடைய கோசல நாட்டின் பெருமைகளை உணர்ந்தவர் யார்? கடலின் எல்லையைக் கண்டுவிட்டு மீள வல்லவர் யார்? சரயு ஆறு வாய்க்கால்களாகப் பிரிந்து பாய்ந்தும் அதனை முற்றிலுமாகப் பார்க்க முடியவில்லையே.
61
வீடு பேறு அடையும்படியாகக் கடல் பொங்கி ஊழி பெயர்ச்சி நிகழ்ந்தாலும், அழிவில்லாத நலம் பெருகும் கோசல நாட்டை இதுவரைக் கூறினோம். இனி அதன் தலைநகரம் பற்றிக் கூறுவோம்.
14-1 மிகை
வயலிலுள்ள கழுநீர்ப் பூக்களைச் சேற்றில் மிதிப்பதால் காளையர் கால்களும், கைகளும் அந்தப் பூவின் மணம் வீசும். பாக்கு மரம் வரைத் துள்ளிப் பாய்ந்த வாளைமீன் பாக்கு மணம் வீசும்.

கூறு பாடலும், குழலின் பாடலும்,
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
'ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்' என,
சாறும் வேள்வியும் தலைமயங்குமே.             56

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும், -மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.          57

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை, பங்கயம்
வால் நிலா உறக் குவிவ மானுமே.       58

பொற்பின் நின்றன, பொலிவு; பொய் இலா
நிற்பின், நின்றன, நீதி; மாதரார்
அற்பின் நின்றன, அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன, கால மாரியே.               59

சோலை மா நிலம் துருவி, யாவரே
வேலை கண்டு தாம் மீள வல்லவர்?-
சாலும் வார் புனல் சரயுவும், பல
காலின் ஓடியும் கண்டது இல்லையே!              60

வீடு சேர, நீர் வேலை, கால் மடுத்து
ஊடு பேரினும், உலைவு இலா நலம்
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம்; நகரம் கூறுவாம்.          61

காளையர் சேறுதன்னைக் கலந்து, உடன் மிதித்து, நட்ட
தாள்களும் கழுநீர் நாறும்; தடக் கையும் அதுவே நாறும்;
ஆளையும் சீறிப் பீறி, அணி மலர்க் கமுகில் பாய்ந்த
வாளையும், பாளை நாறும்; வயல்களும் அதுவே நாறும்.              14-1  (மிகைப் பாடல்)

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -  2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...