Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நகரப் படலம் Kamba Ramayanam 29

அயோத்தியின் பெருமை

1
இனிய பாவலரும், வடநூல் முனிவரும் புகழ்வதும், இந்த உலகத்தில் உள்ளவர்கள் குடியேற விரும்புவதும், வானுலகத்தில் உள்ளவர் இறங்கிவர விரும்புவதுமான ஊர் அயோத்தி.
2
நிலம் என்னும் பெண்ணின் முகமோ, கண்ணோ, மங்கல-நாணோ, முலைமேல் இருக்கும் முத்தாரமோ, உயிரின் இருப்பிடமோ, திருமகள் இருக்கும் தாமரையோ, மாயோன் மார்பில் இருக்கும் மணிப்பெட்டியோ, வானுலகுக்கு மேல் உள்ள உலகோ, ஊழின் இறுதியில் இருக்கும் இடமோ என்றெல்லாம் சொல்லும்படி விளங்குவது அயோத்தி.
3
ஒப்பிட்டுக் கூறமுடியாத இந்த நகரைக் காண்பதற்காக, சிவன், பிரமன், சந்திரன், சூரியன் ஆகியோர் திரிவர்.
4
வச்சிரப் படை கொண்டுள்ள இந்திரன், குபேரன் ஆகியோர் வாழும் அளகையை இந்த அயோத்திக்கு ஒப்பாகப் படைக்கவேண்டும் என்று எண்ணிய மயன் படைக்க முடியாமல் நாணினான்.
5
புண்ணியம் செய்தவர் துறக்கம் புகுவர் என்று வேதங்கள் கூறுகின்றன. இராகவன் அயோத்திக்கு வந்து அறம் வளர்த்தான் என்றால் அயோத்திக்கு நிகர் உண்டோ?


செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வல்லிய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி புரிகின்றது-அயோத்தி மா நகரம்      1

நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ!மாயோன்மார்பில்நன்மணிகள் வைத்தபொற் பெட்டியோ!வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்?        2

உமைக்கு ஒருபாகத்து ஒருவனும்,இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும்,மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்பு அருங் காதல் அது பிடித்து உந்த, அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர்திரிவர்; இது அலால்அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ!   3

அயில் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும்,அளகையும் என்று இவை,அயனார்
பயிலுறவு உற்றபடி, பெரும்பான்மை இப் பெருந் திரு நகர் படைப்பான்;
மயன் முதல் தெய்வத் தச்சரும் தம்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்;-
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இந் நகர் புகலுமாறு எவனோ?           4

'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்' என்னும் ஈது அரு மறைப் பொருளே;
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?
எண்அருங்குணத்தின்அவன்,இனிதுஇருந்து,இவ்ஏழ்உலகுஆள்இடம்என்றால்,
ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் உண்டு என உரைத்தல்?              5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...