Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நகரப் படலம் Kamba Ramayanam 30

அயோத்தி மதில்

6
ஐம்புலன்களை அவித்து அருளும் அறமும் துணையாக நிற்கும் முனிவர்களுக்குப் புகலிடம் திருமால். இவன் இந்நகரில் பிறந்து அரசாண்டான் என்றால் இதற்கு ஈடாகத் தேவர் உலகில் எந்த ஊர் இருக்க முடியும்?
7
அயோத்தியின் மதில் சுவர் நான்கு திசைகளை நோக்கிய சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.
8
முடிவு இல்லாமையால் இதன் மதில் வேதம் போன்றது. வானத்தை அளாவலால் தேவர் போன்றது. திண்மையான பொறிகள் இருப்பதால் முனிவர் போன்றது. காவல் கட்டுப்பாட்டில் கன்னிப்பெண் போன்றது. சூலங்கள் இருப்பதால் காளி போன்றது. அடைய முடியாத தன்மையால் ஈசன் போன்றது.
9
அழகிய மகளிர் வாழ்வதால் தேவர்கள் மட்டும் வந்து பார்க்கட்டும் என்று மற்றவர்களுக்கு மறைப்பாக அயோத்தியின் மதில் விளகியது.
10
உலகை அளத்தல், பகைவர் முடிகளைக் கொண்டிருத்தல், மனுநெறி காத்தல், யாரும் பார்க்கமுடியாத காவலுடைமை, யாராலும் வெல்ல முடியாத வலிமை, சால்புடைய உயர்வு, ஆணைச்சக்கரம் கொண்டிருத்தல் ஆகியவற்றால் இந்த மதில் திருமால் போன்றதாக விளங்கியது. (இரட்டுற மொழிதல்)

தங்கு பேர் அருளும் தருமமும்,துணையாத் தம் பகைப்புலன்கள் ஐந்துஅவிக்கும்
பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செங் கண் மால் பிறந்து, ஆண்டு, அளப்ப அருங் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்,
அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?    6

நால் வகைச் சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன, மதி தோய்
மால்வரைக் குலத்துஇனியாவையும் இல்லை;ஆதலால்,உவமை மற்றுஇல்லை;
நூல் வரைத் தொடர்ந்து, பயத்தொடு பழகி, நுணங்கிய நுவல அரும் உணர்வே
போல் வகைத்து; அல்லால், 'உயர்வினோடு உயர்ந்தது' என்னலாம்-பொன் மதில் நிலையே.7

மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால், வேதமும் ஒக்கும்; விண் புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும், திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால்; எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும்           8

பஞ்சி, வான் மதியை ஊட்டியது அனைய படர் உகிர், பங்கயச் செங் கால்,
வஞ்சிபோல் மருங்குல், குரும்பைபோல் கொங்கை, வாங்குவேய் வைத்தமென் பணைத் தோள்,
அம்சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகுடைத்து அன்று எனஅறிவான்,
இஞ்சி வான் ஓங்கி, இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்துளதே!           9

கோலிடை உலகம் அளத்தலின், பகைஞர் முடித் தலை கோடலின், மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும் நோக்க அருங் காவலின், வலியின்,
வேலொடு வாள், வில் பயிற்றலின், வெய்ய சூழ்ச்சியின், வெலற்கு அரு வலத்தின்,
சால்புடை உயர்வின், சக்கரம் நடத்தும் தன்மையின்,-தலைவர் ஒத்துளதே!              10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...