Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நகரப் படலம் Kamba Ramayanam 31

மதிலைச் சுற்றி அகழி

11
அயோத்தி மதிலில் வேல், வாள், வில், மழு, தண்டு, சக்கரம், தோமரம், உலக்கை, கவண், கல், முதலானவை வைக்கப்பட்டிருந்தன.
12
உயிரினங்கள் அனைத்தையும் காக்கும் செங்கோல் ஆட்சிக்குக் காவலாக இந்த மதில் அமைந்திருந்தது.
13
இந்த மதிலைச் சுற்றிக் கடல்போல் அகழி இருந்தது. விலைமாதர் மனம் போல இந்த அகழி ஆழமானது. இதில் உள்ள நீர் புன்கவி போலத் தெளிவில்லாதது. கன்னிப் பெண்ணின் அல்குல் போல் யாரும் இறங்க முடியாதது. நன்னெறி விலக்கும் எந்திரம் போல முதலைகளைக் கொண்டது.
14
நீரை மொண்டு செல்லும் மேகம் பொழிவது போல அலைநீர் இதில் வீசுவது. 
15
ஆண்களின் வலிமையை உடைக்கும் மகளிர் முகங்கள் போல தாமரைகள் அதில் பூத்து மணம் பரப்பின. 

சினத்து அயில், கொலை வாள், சிலை,மழு,தண்டு,சக்கரம்,தோமரம்,உலக்கை,
கனத்திடைஉருமின்வெருவரும்கவண்கல்,என்றுஇவைகணிப்புஇல;கொதுகின்
இனத்தையும்,உவணத்துஇறையையும்,இயங்கும்காலையும்,இதம்அலநினைவார்
மனத்தையும், எறியும்பொறி உள என்றால்,மற்று இனிஉணர்த்துவது எவனோ?    11

'பூணினும் புகழே அமையும்'என்று,இனையபொற்பில் நின்று,உயிர் நனிபுரக்கும்,
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவிதன் குலமுதல் நிருபர்-
சேணையும் கடந்து, திசையையும் கடந்து,- திகிரியும், செந் தனிக் கோலும்,
ஆணையும் காக்கும்; ஆயினும், நகருக்கு அணி என இயற்றியது அன்றே      12

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய், புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும் படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;-நவிலலுற்றது நாம்.           13

ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா,
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா,
மேகம், மொண்டு கொண்டு எழுந்து, விண் தொடர்ந்த குன்றம் என்று,
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதிற்கண் வீசுமே.            14

அந்த மா மதில் புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
கந்தம் நாறு பங்கயத்த கானம், மான மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம்
வந்து போர் மலைக்க, மா மதில் வளைந்தது ஒக்குமே.    15

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...