Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அரசியற் படலம் Kamba Ramayanam 47

எல்லா உயிரும் இருக்கும் ஓர் உடம்பு போல் தயரதன் நாடாண்டான்

வயிரப்பூண் அணிந்த சிங்கமாக இவன் விளங்கினான். உயிரினங்களை யெல்லாம் இவன் பாதுகாத்தலால் அந்த உயினங்கள் எல்லாம் வாழும் ஒரு உடம்பு என்னும்படி இவன் விளங்கினான். 10

குன்று போல் உயர்ந்த தோளினை உடையவன். இவனது ஆணைச்சக்கரம் சூரியன் போல உலகினைக் காத்துவந்தது. 11

பகை இல்லாமையால் இவன் தோள்கள் தினவு எடுக்கும். வறுமையில் வாடுபவன் பேணும் வயல் போல இவன் நாட்டைக் காத்துவந்தான். 12

உலகின் இருளைப் போக்கும் சூரிய குலத்தில் பிறந்தவன். பார்த்திபன், இரகு, அயன் ஆகியோர் வழியில் பிறந்தவன். மிகை 5-1

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.  10

குன்றென உயரிய குவவுத் தோளினான்,
வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,
ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை
நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே.       11

'எய்' என பழு பகை எங்கும் இன்மையால்,
மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான்.         12

மிகைப் பாடல்கள்

விரிகதிர் பரப்பி, மெய்ப் புவனம் மீது இருள்
பருகுறும் பரிதி அம் குலத்தில், பார்த்திபன்
இரகு, மற்று அவன் மகன் அயன் என்பான், அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே.              5-1  

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -4. அரசியற் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...