Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 48

மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன் வசிட்டனிடம் கூறி வருந்துதல்

பிரமனை ஒத்த முனிவனாகிய வசிட்டனை வணங்கித் தயரதன் வேண்டுகிறான். நீ எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், நான் செய்த தவமாகவும், என்மேல் அன்பு காட்டும் கடவுளாகவும், பிற எல்லாமாகவும் விளங்குகிறீர். 1

என் சூரிய குலத் தலைவர்கள் பன்னெடுங்காலம் ஆண்ட பாங்கில் உன் அருளால் நானும் உலகினைப் பாதுகாத்து வருகிறேன். 2

அறுபது ஆயிரம் ஆண்டுகள் உலகைக் காத்துவரும் எனக்கு வேறு குறை ஏதும் இல்லை. எனக்குப் பின்னர் உலகைக் காப்பது யார் என்னும் குறைதான் உள்ளது. 3

இப்போது முனிவர்களும், அந்தணர்களும் வருத்தம் இன்றி வாழ்கின்றனர். எனக்குப் பின்னர் அவர்கள் வருந்துவார்களோ என்னும் அகந்தை என் உள்ளத்தில் இருக்கிறது. 4

முன்னம் அமரர்க்குத் திருமால் அருளியதை வசிட்டன் சிந்தித்தல்

இப்படி அரசன் கூறக் கேட்ட சரோருகன் மகன் வசிட்டன் எண்ணிப் பார்த்தான். 5

ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது, 'தொல் குலத்
தாயரும், தந்தையும், தவமும், அன்பினால்
மேய வான் கடவுளும், பிறவும், வேறும், நீ;  1
              
'எம் குலத் தலைவர்கள், இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்,
மங்குநர் இல் என, வரம்பு இல் வையகம்,
இங்கு, நின் அருளினால், இனிதின் ஓம்பினேன்.     2

அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;-
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ.          3

'அருந் தவ முனிவரும், அந்தணாளரும்,
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும், என் அகத்தை' என்றனன்.    4

முரசு அறை செழுங் கடை, முத்த மா முடி,
அரசர் தம் கோமகன் அனைய கூறலும்,
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்-       5

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...