Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 59

கலைக்கோட்டு முனிவரை அயோத்திக்கு அழைத்துவருவதாக உராமபதன் வாக்களித்தான்

தயரதன் வருவது கேட்டு உரோமபதன் ஒரு ஓசனை தூரம் தன் படை சுழச் சென்று எதிர்கொண்டு வரவேற்றான். 56
உரோமபதன் தன்னை வரவேற்க வருவது கண்ட தயரதன் தேரிலிருந்து இறங்கி உரோமபதனைத் தொழ, இருவரும் ஆரத் தழுவிக்கொண்டனர். 57
நான் செய்த தவமோ, என் நாடு செய்த தவமோ, இங்கு எழுந்தருளியது என்று சொல்லித் தயரதனைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு தன் ஊருக்கு உரோமபதன் வந்தான். 58
தயரதனை ஒரு பொன் மண்டபத்தில் இருக்கச் செய்தான். அங்கு மகளிர் தயரதனுக்குப் பல்லாண்டு கூறினர். உரோமபதன் தயரதனுக்கு விருந்தளித்தான். 59
வந்த நோக்கத்தைத் தயரதன் கூற, தயரதன் விரும்பியபடி, அவ்வியம் இல்லா மனத்தவனாகிய கலைக்கோட்டு முனிவனை அயோத்திக்கு அழைத்துவருவதாக உரோமபதன் வாக்களித்தான். 60

கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற,
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல்-தானை புடை சூழ, கழற் கால் வேந்தன்,
செழுந் தோடும் பல் கலனும் வெயில் வீச, மாகதர்கள் திரண்டு வாழ்த்த,
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் - அரசை எதிர்கோள் எண்ணி.     56

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் - தனைக் கண்ணுற்று, எழிலி நாண
அதிர்கின்ற பொலந் தேர் நின்று அரசர்பிரான் இழிந்துழி, சென்று அடியில் வீழ,
முதிர்கின்ற பெருங் காதல் தழைத்து ஓங்க, எடுத்து இறுக முயங்கலோடும்,
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி, இவை உரைத்தான் - களிப்பின் மிக்கான்:     57

'யான் செய்த மா தவமோ! இவ் உலகம் செய் தவமோ! யாதோ! இங்ஙன்,
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?' என, மனம் மகிழா மணித் தேர் ஏற்றி,
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச் செழு நகரில் கொணர்ந்தான் - தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவுத் தோளான்               58

ஆடகப் பொன் சுடர்,இமைக்கும் அணி மாடத் திடை,ஓர் மண்டபத்தை அண்மி,
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர் பல்லாண்டு இசைப்ப, பைம் பொன் பீடத்து,
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி, கடன்முறைகள் யாவும் நேர்ந்து,
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப, இனிது உவந்தான், சுரர் நாடு ஈந்தான்.           59

செவ்வி நறுஞ் சாந்து அளித்து, தேர் வேந்தன் தனைநோக்கி, 'இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி' என, நிகழ்ந்த பரிசு அரசர்பிரான் கழறலோடும்,
'அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந் தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வி முடியோய்!'எனலும்,தேர்ஏறிச் சேனையொடும்அயோத்தி சேர்ந்தான்.       60

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...