Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 63

மகம் (யாகம்) செய்க, என்றார், முனிவர்

சான்றோரே! தங்கள் அருளால் என் குலம் தழைக்கும் என்று தயரதன் கூறினான். 76
வசிட்டன் இருக்கும்போது என்னை அழைத்தது ஏன் என்று கலைக்கோட்டு முனிவர் வினனார். 77
அரி மகம் (அரியை வேண்டி நடத்தும் வேள்வி) நடத்த எண்ணி அழைத்தாயா, எனவும் வினவினார். 78
துன்பமில்லாமல் நாடாண்டு வருகிறேன். எனக்கு மகன் இல்லாக் குறையைப் போக்க வேண்டும் – என்று தயரதன் கூறினான். 79
இந்த உலகை மட்டுமா, ஏழு உலகங்கையும் ஆளும் மகனைப் பெறுவாய். அதற்கான வேள்வியை இன்றே செய்வாயாக – என்று முனிவர் கூறினார். 80

'சான்றவர் சான்றவ! தருமம், மா தவம்,
போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்;
யான் தவம் உடைமையும், இழப்பு இன்றாம் அரோ.'            76

என்னலும், முனிவரன் இனிது நோக்குறா,
'மன்னவர்மன்ன! கேள்: வசிட்டன் என்னும் ஓர்
நல் நெடுந் தவன் துணை; நவை இல் செய்கையால்,
நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வரோ?'               77

என்று இவை பற்பல இனிமை கூறி, 'நல்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினாய்!
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ,
இன்று எனை அழைத்தது இங்கு? இயம்புவாய்!' என்றான்.             78

'உலப்பு இல் பல் ஆண்டு எலாம், உறுகண் இன்றியே,
தலப் பொறை ஆற்றினென்; தனையர் வந்திலர்;
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை
நலப் புகழ் பெற, இனி நல்க வேண்டுமால்.'   79

என்றலும், 'அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர் - ஏழும் ஓம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு!' என்றான்.      80

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...